கோர விபத்தில் சிக்கி இளம் தம்பதி பலி: பொலிஸார் விசாரணை
அக்குரஸ்ஸ - சியம்பலாகொட - பிடபெத்தர வீதியில் போபகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தம்பதியினர் பலியாகியுள்ளனர்.
போபகொட சந்திக்கு அருகில் நேற்று (25) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.
பிடபெத்தரை, மெதிரிபிட்டிய பாடசாலையில் கிடைத்த பரிசில்களுடன் மோட்டார் சைக்கிளில் மகதுரையில் உள்ள தமது வீட்டை நோக்கி இருவரும் பயணித்த நிலையில், அக்குரஸ்ஸ பகுதியிலிருந்து பிடபெத்தரை நோக்கி பயணித்த சொகுசு வான் மோதி உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் மகடூர பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான பாக்யா பொரலஸ்ஸ மற்றும் அவரது கணவர் இந்திக்க சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய வர்த்தகரான சொகுசு வான் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர் குடிபோதையில் இருந்தாரா என்பதை கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாக்யாவின் சடலம் அக்குரஸ்ஸ வைத்தியசாலைக்கும், இந்திகவின் சடலம் கராபிட்டிய வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது
மேலும் உயிரிழந்த பாக்யா கர்ப்பமாக இருந்ததாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.