நிலை தடுமாறிய முச்சக்கரவண்டி : இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம்
ஹம்பாந்தோட்டை(Hambantota) வெல்லவாய பிரதான வீதியின் பல்லே மல்லால என்ற இடத்தில், வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி மோதி கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் பல்லேமலாலையைச் சேர்ந்த 23 வயதான மலபாடினகே மதுஷிகா பர்சானி என்ற கர்ப்பிணித் தாயாவார்.
உயிரிழந்த கர்ப்பிணித் தாய் தனது இரண்டரை வயது ஆண் குழந்தையுடன் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது இன்று(12) காலை 10.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் இருந்து வந்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி கர்ப்பிணி பெண் மற்றும் குழந்தை மீது மோதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்த கர்ப்பிணி பெண் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
உயிரிழந்த பெண்ணுக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட போதும், வயிற்றில் இருந்த குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. பெண்ணுடன் பயணித்த சிறு குழந்தையும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை ஹம்பாந்தோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.