ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த காவல்துறையை முற்றிலும் கலைப்பதாக அறிவிப்பு
அமெரிக்காவில் கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த மினியாபொலிஸ் காவல்துறையை முற்றிலும் கலைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மினியாபொலிஸ் நகரில் செயற்பட்டு வரும் குறித்த காவல்துறையை முற்றிலும் கலைத்துவிட்டு புதிதாகக் கட்டமைக்க முடிவு செய்துள்ளோம் என மினியாபொலிஸ் நகரின் சபை தலைவர் லிசா பெண்டர் அறிவித்துள்ளார்.
தங்கள் சமூகம் மற்றும் மக்களுடன் இணைந்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல்துறையை உருவாக்க தாங்கள் கடமைப்பட்டுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகர் மினியாபொலிஸில், மே 25ம் திகதி, 46 வயதான ஜோர்ஜ் ஃபிலாய்டின் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர், பொலிஸ் அதிகாரி டெரொக் சாவின் பிடியில் இருந்தபோது கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இதனையடுத்து, அவரின் மரணத்துக்கு நீதி கோரி, கொரோனா அச்சத்தை பொருட்படுத்தாமல், கடந்த இரு வாரங்களாக பல இலட்சக்கணக்கான மக்கள், சாலைகளில் திரண்டு மாபெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக கருப்பினத்தவர்கள் அடக்குமுறையை சந்தித்து வருவதால் இந்த போராட்டம், நாடு முழுவதும் இனவெறிக்கு எதிரான போராட்டமாக வலுவடைந்து வருகிறது.
இந்நிலையில், போராட்டத்துக்குக் காரணமாக இருந்த, மினியாபொலிஸ் காவல்துறையை முற்றிலும் கலைப்பதாக, அறிவித்திருப்பது, போராட்டக்காரர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
எனினும் இனவெறிக்கு எதிரான போராட்டம், அமைதியான முறையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.