வேலைக்காக டுபாய் சென்ற இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த கதி
சிரியாவில் (Syria) வீட்டு வேலை செய்யும் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குருநாகல் (Kurunegala) தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய திருமணமாகாத துஷாரிகா கல்தேரா என்ற பெண்ணே இந்த சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த பெண் பணிபுரியும் வீட்டின் உரிமையாளர்கள் அவர் மீது கொடூரமான தாக்குதல்களை மேற்கொள்வதுடன் பாலியல் ரீதியான தொந்தரவுகளை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடம் மற்றும் 9 மாதங்களுக்கு முன் வீட்டு வேலைக்காக டுபாய் (Dubai) நகரிற்கு சென்ற அவர், அங்கு ஒரு வீடொன்றில் பாதுகாப்பாக இருந்துள்ளார்.
எனினும், அந்த வீட்டு உரிமையாளர்கள் வேறு நாட்டிற்கு சென்றமையால் இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட்டை துஷாரிகாவிடம் கொடுத்து அவரை வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
விமான டிக்கெட் கையிலிருந்த போதும் குறித்த வேலைவாய்ப்பு நிறுவனம், அவரை சிரியாவில் உள்ள வீடொன்றின் உரிமையாளர்களிடம் விற்றுள்ளது.
தற்போது சிரியாவில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வரும் இவர், கடும் வன்முறைகளுக்கு மத்தியில் பல மாதங்களாக சம்பளம் இன்றி வேலை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பளம் குறித்து விசாரித்த போது, வீட்டில் இருந்த பெண்கள் துஷாரிகாவை கடுமையாக தாக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தன்னை தாய்நாட்டிற்கு அழைத்து வருமாறு இலங்கை அரசாங்கத்திடம் துஷாரிகா கோரிக்கை விடுத்துள்ளார்.