தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்றுடன் நிறைவு
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கோரும் சுற்றறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவலின்படி, தபால் மூலம் வாக்களிக்கும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, வாக்காளர் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.
எவ்வாறாயினும், தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பல்வேறு தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
இதன்படி தபால் மூல வாக்குகளை ஏற்றுக்கொள்வது இன்றுடன் நிறைவடைவதோடு, எக்காரணம் கொண்டும் அது ஒத்திவைக்கப்பட மாட்டாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
www.elections.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று தபால் வாக்கு விண்ணப்பதாரர்கள் மற்றும் ஏனைய வாக்காளர்கள் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளையும் அழைத்து, தேர்தல் ஆணைக்குழுவில் சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.