வவுனியா இளைஞனின் மரணத்தில் சந்தேகம்: உடற்கூறாய்விற்கு உத்தரவு
வவுனியா (Vavuniya) மகாறம்பைக்குளம் தாஸ்நகர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது சடலத்தை உடற்கூறாய்வு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு வவுனியா நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (02) மாலை தாஸ்நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இளம்குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டிருந்தார்.
உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட அவர் ஏற்கனவு மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் சடலத்தை பார்வையிட்ட நீதவான் அதனை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதன் படி, சடலம் வவுனியா வைத்தியசாலையின் பிண அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாளையதினம் உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த கோபி வயது 26 என்றஇளம் குடும்பஸ்தரே மரணமடைந்தார். சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.