
ஐந்து தோட்டப் பயிர்களின் ஏற்றுமதி : மில்லியன் டொலர் வருமானம் அதிகரிப்பு
தேயிலை, இறப்பர், தென்னை, இலவங்கப்பட்டை மற்றும் மிளகு ஆகிய ஐந்து தோட்டப் பயிர்களின் ஏற்றுமதியின் காரணமாக 2024 ஜனவரி முதல் ஏப்ரல் வரை நாட்டின் ஏற்றுமதி வருமானம் 1118.06 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ஜனவரி முதல் ஏப்ரல் 2023 வரை இந்தத் தோட்டப் பயிர்கள் மூலம் ஈட்டிய ஏற்றுமதி வருமானம் 884.6 மில்லியன் டொலர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, கடந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் ஏற்றுமதி வருமானத்தை விட 234 மில்லியன் டொலர்களை இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் ஈட்ட முடிந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கை தேயிலை சபையினால் ஒதுக்கப்பட்ட பணத்தில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் உள்ள தேயிலை தோட்டங்களில் உள்ள வீதிகளை புனரமைப்பதற்கான பணி உத்தரவை உடனடியாக ஆரம்பிக்குமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை தேயிலை சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.