24 மணி நேரத்திற்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை கண்டியில் இன்று பிற்பகல் பெய்த கடும் மழையினால் கண்டி புகையிரத நிலையம் மற்றும் போகம்பர பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் கண்டி பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்க அணையின் 04 கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும் மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் வான்பாய ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.