இன்று பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் மறைந்த இரா.சம்பந்தனின் பூதவுடல்

இன்று பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் மறைந்த இரா.சம்பந்தனின் பூதவுடல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் இன்றைய தினம் (02) கொழும்பில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. 

பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில், இன்று காலை 9மணி முதல் அவரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அதேநேரம் நாளைய தினம் (03) நாடாளுமன்றில் அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. 

நாளை பிற்பகல் 2 மணி முதல் 4 மணிவரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் நாடாளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்பின்னர் அவரது சொந்த ஊரான திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியைகளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை இரா.சம்பந்தனின் மறைவு, தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைத் தீர்வுக்கான பயணத்தில் பாரியதொரு இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாகத் தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. 

அதன் பொதுச்செயலாளர் கோவிந்தன் கருணாகரம் விடுத்துள்ள, இரங்கல் செய்தியில் இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தந்தை செல்வநாயகத்தால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் வரிசையில் இரா.சம்பந்தனும் இணைந்து கொண்டுள்ளதாகக் கோவிந்தம் கருணாகரம் சுட்டிக்காட்டியுள்ளார்.