மன்னாரில் ஆயிரம் கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கட்டி மூட்டைகளுடன் ஒருவர் கைது

மன்னாரில் ஆயிரம் கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கட்டி மூட்டைகளுடன் ஒருவர் கைது

மன்னாரில் உலர்ந்த மஞ்சள் கட்டி மூட்டைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தலைமன்னார் பிரதான வீதியின் ஓலைத்தொடுவாய் கடற்கரைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கடல் வழியாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் வருகையைத் தடுக்கவும், தீவின் கரையிலிருந்து நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் இலங்கை கடற்படை தொடர்ந்து கடற்பிராந்தியத்தில் விசேட ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது நேற்று இரவு ஓலைத்தொடுவாய் கடற்கரையில் கடற்படையினர் விசேட ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது கடல் மார்க்கமாக மன்னார் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட 20 மூட்டைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் ஆயிரம் கிலோகிராம் எடை கொண்ட உலர்ந்த மஞ்சள் கட்டி மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது சந்தேகநபரொருவரும் கைது செய்யப்ப்பட்டுள்ளார். மஞ்சள் மூட்டைகள் கடல் வழியாக மன்னாருக்கு கடத்தப்பட்டிருப்பது விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

மீட்கப்பட்ட உலர்ந்த மஞ்சள் கட்டி மூட்டைகள் சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர் கொரோனா அச்சம் காரணமாக சுகாதார திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.