இந்தியாவில் ஒரேநாளில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று- 779 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் ஒரேநாளில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று- 779 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பதிவாகிய அதிஉச்ச ஒருநாள் பாதிப்பாக இது பார்க்கப்படுகிறது.

உலகின் 215இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் தற்போது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

அதற்கமைய நேற்று ஒரே நாளில் அங்கு 52 ஆயிரத்து 249 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  15 இலட்சத்து 84 ஆயிரத்து 384 ஆக பதிவாகியுள்ளது.

அதேநேரம் நேற்று ஒரேநாளில் 779 பேர் இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் இந்தியாவில் உயிரிழப்புக்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 3ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 10 இலட்சத்து 21 ஆயிரத்து 611 பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதேநேரம், 5 இலட்சத்து 27 ஆயிரத்து 770 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், அவர்களில் 8,944 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த வைரஸ் காரணமாக இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மகராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகியன தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.