பொதுத்தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் தயார்

பொதுத்தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் தயார்

ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது கொழும்பிலிருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனைத்து போக்குவரத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே தயார்செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டபோது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இந்த மாதம் 31 ஆம் திகதி முதல் மக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்க இலங்கை போக்குவரத்துசபை பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் ரயில்களை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

இந்த தேர்தல் காலங்களில் ஏராளமான மக்கள் கிராமப்புறங்களுக்கு பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், கண்டி, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா போன்ற அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் பேருந்துகள் பயணிக்கும் என்றும் அவர் கூறினார்.

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ரயில் போக்குவரத்தை விரிவுபடுத்தவும், தொலைதூர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கொழும்புக்குத் திரும்புவதற்கு ஓகஸ்ட் 7 முதல் 10 வரை தேவையான பேருந்துகள் மற்றும் ரயில்களை சேவையில் ஈடுபடுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.