
வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வடக்கு, கிழக்கு,மேல், சம்பரகமுவ, வட மேல் மற்றும் மத்திய மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஒரு சில பகுதிகளின் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டை சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக சீரற்ற வானிலை மேலும் சில தினங்களுக்கு தொடருமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கடற்பிரதேசங்களில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படும்.
இந்நிலையில் மீனவ சமூகத்தினர் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருவளையில் இருந்து காலியூடாக ஹம்பாந்தோட்டை வரை கரையோரத்தை அண்மித்த பகுதிகளில் கடல் அலைகள் உயரக்கூடும். கரையை அண்மித்த நிலப்பகுதிகளுக்கும் கடல் அலைகள் வருவதற்கான சாத்தியம் காணப்படுகிறது.
இந்நிலையில் கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் குறித்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படவேண்டும்.
அத்துடன் மழை, மண்சரிவு, பலத்த காற்று, இடி மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பொது மக்கள் பாதுகாப்பு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மலையக பகுதிகளில் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து வீழ்வதற்கான அபாயம் காணப்படுகிறது. எனவே பொது மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்.
இதேவேளை வாகன சாரதிகள் இயற்கை அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்பு பெறும் வகையில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.