மட்டக்களப்பில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
ஓட்டுமாவடியில் இருந்து மட்டக்களப்புக்கு (Batticaloa) கார் ஒன்றில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த கைது நடவடிக்கை நேற்று (11.05.2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவதினமான நேற்று(11) மாலை 6.00 மணியளவில் மட்டக்களப்பு தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புலனாய்வு பிரிவினர் மாத்திரைகளை கடத்தி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, காரில் இருந்து 1440 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சட்டவிரோத கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.