ஆற்றில் மணல் அள்ளச் சென்றவர் அபயக்குரலெழுப்பியதையடுத்து மாயம்!

ஆற்றில் மணல் அள்ளச் சென்றவர் அபயக்குரலெழுப்பியதையடுத்து மாயம்!

ஆற்று மண அள்ளச் சென்றவர் முதலை கௌவியதில் மாயமாகியுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள கறுப்பாலம் முந்தானை ஆற்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொடுவாமடு கிராமத்தைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி மயில்வாகனம் வயது 48 என்பவரே காணாமல் போயுள்ளார். காணமல் போன நபர் தொடர்பில் தேடுதல் தொடர்ந்து இடம்பெறுகிறது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சம்பவம் இடம்பெற்ற தினம் காலை இவர் வழமைபோன்று கறுப்புப் பாலம் முந்தானை ஆற்றில் ஆற்று மணல் ஏற்றுவதற்காக மாட்டு வண்டிலில் சென்று ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருக்கும் போதே முதலை கௌவியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

அதன் போது அவர் அபயக் குரல் எழுப்பிய போதிலும் அக்கம்பக்கத்தில் எவருமிருக்கவில்லை என்றும் தூரத்தே இருந்து உதவிக்கு ஆட்கள் விரைந்து வருவதற்கிடையில் முதலை இழுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் மணல் ஏற்றுவதற்காக கொண்டு சென்ற எருதுகளும் வண்டிலும் ஆற்று மருங்கில் கிடந்த நிலையில் உறவினர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளில் கரடியனாறு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

வழமையாக இந்த கறுப்புப் பாலம் ஆற்றில் முதலைகள் நடமாடுகின்ற போதிலும் அங்கு ஆற்றுமணல் அள்ளும் மாட்டு வண்டில்காரர்களை முதலைகள் தாக்குவதில்லை என்று மாட்டு வண்டில் மணல் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மணல் அள்ளும் மாட்டு வண்டில்காரர் ஒருவரை முதலை கௌவிச் சென்றது இதுவே முதற் தடவை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.