ஸ்ரீலங்காவில் உயிர்களைக் காவு கொண்ட மோசமான விபத்துக்கள்

ஸ்ரீலங்காவில் உயிர்களைக் காவு கொண்ட மோசமான விபத்துக்கள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புஞ்சி பொரளை சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மருதானை நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியை கடக்க முற்பட்ட பெண் ஒருவர் மீது மோதியதில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது 42 வயதுடைய பெண் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆடிகல தெற்கு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

மீகொடை பகுதிக்கு பயணித்த முச்சக்கரவண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்த நிலையில் எதிர்திசையில் வந்த லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் 22 வயதுடைய பதுளை பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, சபுகஸ்கந்த மாகொல வீதியின் சபுகஸ்கந்த பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்து ஒன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

பியகமவில் இருந்து கிரிபத்கொடை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் பயணித்த வாகனமொன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் 45 வயதுடைய கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

அதேபோல், பன்னல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குளியாப்பிட்டி வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 70 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குளியாப்பிட்டியில் இருந்து பன்னல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி ஒருவர் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.