செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த நகரம்

செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த நகரம்

கிரீஸ் நாட்டின் தலைநகரமான ஏதென்ஸ் நகரம் கடந்த செவ்வாய்க்கிழமை (23) திடீரென செம்மஞ்சள் நிறமாக காட்சியளித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

புராதன ஒலிம்பிக் மைதானம் அமைந்துள்ள சின்டக்மா சதுக்கம், பார்த்தியான் ஆலயம், லிகாப்பட்டஸ் குன்றுகளை உள்ளடக்கிய பகுதிகள் உட்பட ஏதென்ஸ் நகரம் செம்மஞ்சள் நிறமாக மாறி காட்சியளித்துள்ளது. 

 

இதனால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்நாட்டவர்கள் அச்சமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்தநிலையில் ஏதென்ஸ் நகரின் இந்த மாற்றத்துக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விளக்கமளித்துள்ளது.

அதாவது, வட ஆபிரிக்காவில் இருந்து கிரீஸ், சிப்ரஸ், மசிடோனியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தக் காலத்தில் மேகக் கூட்டங்கள் நகர்வது வழமை. 

இந்தநிலையில் குறித்த மேகக் கூட்டத்துடன் சகாராப் பாலைவனத்தின் மண் துகள்கள் கலந்ததால் கிரீஸ் நாட்டை செம்மஞ்சள் நிற போர்வை போர்த்தியதுபோல புழுதிப் புயல் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 நாட்களுக்கு இந்தநிலை நீடிக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

செம்மஞ்சள் நிறமாக மாறிய ஏதென்ஸ் நகரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.