
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 12 லட்சம் புதிய வாக்காளர்கள்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்கள் வாக்களிக்க எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2015 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் 12 லட்சத்து 19 ஆயிரத்து 395 புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் தேர்தலில் வாக்களிப்பதற்கு மொத்தமாக ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அவர்களில் 31.95 வீதமானோர்18 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும், 1.67 வீதமானோர், முதல் வாக்காளர்கள் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
அத்துடன், அவர்களில் இரண்டு லட்சத்து 71 ஆயிரத்து 789 பேர் கடந்த ஜனாதிபதித் தேர்தல் முதல் பதிவு செய்யப்பட்டவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
22 தேர்தல் மாவட்டங்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 38 ஆயிரத்து 806 புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
அத்துடன், குறைந்த அளவிலான புதிய வாக்காளர்கள் பொலன்னறுவை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு நான்காயிரத்து 666 வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, வாக்களிப்பதற்காக கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் 17 லட்சத்து 85 ஆயிரத்து தொள்ளாயிரத்து 64 வாக்காளர்கள் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது