ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள்: வியப்பில் வைத்தியர்கள்..!
பாகிஸ்தானில் ஒரே பிரசவத்தில் பெண்ணொருவர் ஆறு குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
முகமது வஹீத் என்பவரின் மனைவியான ஜீனத் வஹீத் என்பவரே இவ்வாறு குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
குறித்த பெண் கடந்த 18 ஆம் திகதி ராவல் பிண்டியில் உள்ள மாவட்ட தலைமையக மருத்துவமனையில் பிரசவ வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் 19 ஆம் திகதி காலை ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு மணி நேரத்திற்குள் ஆறு குழந்தைகளை ஒன்றன் பின் ஒன்றாக அவர் பெற்றெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தைகளில் நான்கு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் என்றும் ஒவ்வொரு குழந்தைகளும் இரண்டு கிலோவுக்கு குறைவான எடை கொண்டவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆறு குழந்தைகளும் அவர்களின் தாயும் நலமாக இருப்பதாக மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் பர்சானா தெரிவித்துள்ளார்.
குறித்த குழந்தைகளை வைத்தியர்கள் இன்குபேட்டரில் வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் 4.5 மில்லியன் பெண்களில் ஒருவர் மட்டுமே இவ்வளவு அரிதாக கர்ப்பம் தரிப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.