உயிரிழந்த நபருடன் வங்கியில் கடன் வாங்க சென்ற பெண்; க்ஷாக்கான அதிகாரிகள்!
பிரேசிலில் சக்கர நாற்காலியில் இறந்து கிடந்த நபருக்கு கடன் வாங்க வங்கிக்குச் சென்ற பெண்ணைக் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைதான பெண் எரிக்கா வியரா நுவினிஸ் (Erika Vieira Nunes) 68 வயது ஆனவரை வங்கிக்கு அழைத்து வந்தார். சக்கர நாற்காலியில் அழைத்துசெல்லப்பட்ட நபரின் பெயரில் கடன் கேட்டதும் வங்கி ஊழியர்களுக்குச் சந்தேகம் எழுந்தது.
இதனையடுத்து அவர்கள் உடனடியாக அவசரச் சேவைகள் பிரிவிற்கு அழைப்பு விடுத்தனர். வங்கியில் பதிவுசெய்யப்பட்ட காணொளியில் நுவினிஸ் அந்த ஆடவரைப் பிடிக்காத நேரத்தில் அவரது தலை பின்னால் சாய்வது தெரிந்தது.
"உங்களுக்குக் கேட்கிறதா? நீங்கள் கையெழுத்திட வேண்டும்," என்று நுவினிஸ் அந்த நபரிடம் பேசுவது காணொளியில் பதிவானது. "அவர் எதுவும் பேசமாட்டார்.. அவர் அப்படித்தான்," என்று நுவினிஸ் கூறினார்.
அவசரப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் வங்கிக்கு வந்த நிலையில் சக்கர நாற்காலியில் இருந்தவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். நுவினிஸ் அந்த ஆடவரின் பெயரில் சுமார் 3,250 டாலர் கடன் வாங்க முயன்றதாக கூறப்படும் நிலையில் நுவினிஸ் கைது செய்யப்பட்டார்.