மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர்.
தொடக்க வீரர் அஜிங்யா ரஹானே 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும், அவரைத் தொடர்ந்து களத்திற்கு வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 40 பந்துகளில் தலா 5 சிக்சர் மற்றும் பவுண்டரிகளை விளாசி 69 ரன்கள் எடுத்தார்.
ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்கள் சேர்க்க, 6 ஆவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய தோனி, கடைசி ஓவரை எதிர்கொண்டார். இந்த ஓவரை மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா வீச, அதன் 3,4 மற்றும் 5 ஆவது பந்துகளை சிக்சருக்கு விளாசினார் தோனி. 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 206 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும், இஷான் கிஷனும் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இஷான் கிஷன் 23 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
திலக் வர்மா 31 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 2 ரன்களும், டிம் டேவிட் 13 ரன்களும் எடுத்தனர். விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 63 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 11 பவுண்டரியுடன் 105 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.