
மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (Sri Lanka Freedom Party) தலைவராக செயற்படுவதற்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (04.04.2024) கொழும்பு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1994ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க (Chandrika Bandaranaike Kumaratunga), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவரான மைத்திரிபால சிறிசேன தலைவர் பதவியில் தொடர்வதற்கு இடைக்கால தடை விதிக்குமாறு தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த உத்தரவு ஏப்ரல் 18ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, இராஜாங்க அமைச்சர் லசந்த அலகிய வண்ண மற்றும் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.
கட்சித் தலைமையகத்தில் கடந்த 30.3.2024அன்று செயற்குழுவில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க நீக்கப்பட்டு குறித்த பதவிக்கு மகியங்கனை தொகுதி அமைப்பாளர் கே.பி. குணவர்தன நியமிக்கப்பட்டிருந்தார்.
மேலும், இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு குறித்த பதவிக்கு மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஹெக்டர் பெத்மகே நியமிக்கப்பட்டிருந்தார்.
அதேபோல், அமைச்சர் மஹிந்த அமரவீர சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனை தொடரந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவி நீக்கம் செய்தமைக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் (Mahinda Amaraweera) மகிந்த அமரவீர, பொருளாளர் லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna) மற்றும் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake) ஆகியோர் கூறியிருந்தனர்.
இவ்வாறான முறுகல் நிலை கட்சிக்குள் தொடரும் நிலையில் தற்போது தலைவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமையானது கட்சிக்குள் ஒரு குழப்பமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இவ்வாறானதொரு பின்னணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் மிக நெருங்கிய பிணைப்பை கொண்டுள்ள சந்திரிக்கா சுதந்திரக் கட்சி தொடர்பான விடயத்தில் மும்முரம் காட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.