பெங்களூரு அணிக்கு 2 ஆவது தோல்வி... கொல்கத்தாவிடம் 7 விக். வித்தியாசத்தில் வீழ்ந்தது
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 2 போட்டிகளில் தோல்வியடைந்து பாயின்ட்ஸ் டேபிளில் 6 ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்களாக விராட் கோலி மற்றும் டூப்ளசிஸ் களத்தில் இறங்கினர். டூப்ளசிஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இதையடுத்து களம் புகுந்த கேமரூன் கிரீன் விராட் கோலியுடன் இணைந்த நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். க்ரீன் 33 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த மேக்ஸ்வெல் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும், பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி 59 பந்துகளில் தலா 4 சிக்சர் மற்றும் பவுண்டரியுடன் 83 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். கடைசி ஓவர்களில் தினேஷ் கார்த்திக் 3 சிக்சர்கள் பறக்கவிட, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 182 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக கொல்கத்தா அணியின் சுனில் நரைன் 22 பந்துகளில் 47 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளில் 50 ரன்களும் எடுத்தனர். இந்த தொடரில் 2 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி இரண்டிலும் வெற்றி பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.