அமெரிக்கா பால விபத்தில் இருவரின் சடலங்கள் மீட்பு

அமெரிக்கா பால விபத்தில் இருவரின் சடலங்கள் மீட்பு

கடந்த செவ்வாய்க்கிழமை (26) அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் உள்ள பாலத்தில் இலங்கை நோக்கி பயணித்த கப்பல் மோதி விபத்துக்குள்ளானதில் காணாமல் போன இருவரின் சடலங்களை நிவாரணக் குழுவினர் மீட்டுள்ளனர்.

ஆனால் ஆற்றில் மேலும் 4 உடல்கள் இருப்பதாகவும், அவற்றை அகற்றுவது கடினமான பணி என்றும் நிவாரணக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

பாலத்தின் இரும்பு மற்றும் கொங்ரீட், ஆற்றுப்படுகையில் சிதறிக் கிடப்பதே இதற்குக் காரணம்.

எனவே காணாமல் போன ஏனையவர்களின் சடலங்களை கண்டறிவதற்கு காலதாமதமாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.

கப்பல் பாலத்தில் மோதியவுடன் அது ஆற்றில் விழுந்துள்ளதுடன், அப்போது பாலத்தின் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 8 தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்து காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில் அவர்களில் 2 பேரை மீட்டு நிவாரணப் பணியாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

காணாமல் போன ஆறு பேரில் நால்வரின் அடையாளங்களை மேரிலாந்து மாநில அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

இதுவரை Aleandro Hernandez Fuentes (வயது 35 – Mexico) மற்றும் Dorlian Ronial (வயது 26 – Guatemala) ஆகியோரின் சடலங்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எனினும் மிகுவல் லூனா (எல் சால்வடார்) மற்றும் மெனோர் சுவாசோ (ஹோண்டுராஸ்) ஆகியோர் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் அவர்களின் சடலங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.