வெளியில் இருந்து சட்டவிரோதமாக கைதிகளின் கைகளுக்கு செல்லும் பொருட்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்.

வெளியில் இருந்து சட்டவிரோதமாக கைதிகளின் கைகளுக்கு செல்லும் பொருட்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்.

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு வெளியில் இருந்து சட்டவிரோதமான முறையில் பொருட்கள் வழங்கப்பட்டு வந்துள்ள முறை குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறைச்சாலை பேருந்துகள் ஊடாக கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் போது, சம்பந்தப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதிகள் வீசப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் (27) களுத்துறை நகரில் சிறைச்சாலைகள் பேருந்து சென்று கொண்டிருந்த போது இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது. நகரில் இருந்த சிலரினால் இவ்வாறு 3 பொதிகள் குறித்த பேருந்தை நோக்கி வீசப்பட்டதாகவும் அதில் இரண்டு பொதிகள் பேருந்துக்கு வெளியே விழுந்துள்ளதோடு, ஒரு பொதி பேருந்திற்குள் விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பேருந்தில் இருந்த அதிகாரிகள் குறித்த பொதிகளை எறிந்த நபர்களை துரத்திச் சென்று அவர்களில் ஒருவரை கைது செய்து களுத்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கைப்பற்றப்பட்ட பொதியில் புகையிலை மற்றும் கையடக்க தொலைபேசிகள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சிறைச்சாலை பேருந்துகளில் பாதுகாப்பு முறைமைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.