கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீனப்பெண்ணின் செயல் வளைத்துப் பிடித்த காவல்துறை..!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தன்னுடைய இளைய பெண் பிள்ளையை இதுவரை காலமும் கவனித்துக்கொண்ட இலங்கை பெண்ணிடம் கொடுத்துவிட்டு தப்பியோடுவதற்கு முயன்ற சீனப் பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் விமானத்தில் நுழைவதற்கு தயாராக இருந்த நிலையிலேயே நேற்று(12) இரவு கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் 35 வயதான இந்த பெண் தன்னுடைய 58 வயதான தாயுடன் டுபாயில் வாடகை வீடொன்றில் வசித்து வந்ததுடன் பிரபலமான விடுதிகளில் நடனமாடும் நடனக் கலைஞராக இருந்துள்ளார்.
அவருக்கு மூன்று மற்றும் ஆறு வயதுகளில் இரண்டு பெண் பிள்ளைகள் இருந்ததுடன் தன்னுடைய சீனத் தாயை விட இலங்கை பெண்ணை அதிகமாக நேசித்ததால் தம்மைப் பராமரிக்கும் இலங்கைப் பணிப்பெண்ணிடம் அவ்விரு பிள்ளைகளும் மிகுந்த பாசம் காட்டியுள்ளனர்.
குருநாகல் பொல்கஹவெல பொத்துஹெரவில் வசிக்கும் 53 வயதுடைய இந்த பணிப்பெண் தனது சேவையை முடித்துக்கொண்டு அண்மையில் இலங்கைக்கு திரும்பியுள்ளார்.
பணிப்பெண்ணின் பிரிவால் அவ்விரு பிள்ளைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பில் அக்கம் பக்கத்தினர் தெரிந்து கொள்ளாத வகையில் அந்த சீனப்பெண் நடந்துகொண்டுள்ளார்.
இது தொடர்பில் எதனையும் கூறாத சீனப் பெண் இலங்கை பணிப்பெண்ணுக்கு அழைப்பை எடுத்து தான் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள வருகைதர உள்ளதாகவும், தங்களை அழைத்துச் செல்ல கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தருமாறும் அழைத்துள்ளார்.
அதனடிப்படையில் அவர்களை வரவேற்பதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு பணிப்பெண் சென்ற நிலையில் சீனப்பெண் தன்னுடைய தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு டுபாயில் இருந்து வருகைதந்த விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திங்கட்கிழமை(11) இரவு 10.30 மணியளவில் வந்தடைந்துள்ளார்.
அங்கு அவர்கள் சந்தித்துக்கொண்டதுடன் சில மணிநேரம் அன்பை பகிர்ந்து கொண்ட சீனப்பெண், தன்னுடைய சிறிய குழந்தையை இலங்கை பணிப்பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய காவல்துறையினருக்கு இலங்கை பணிப்பெண் தகவலளித்துள்ளார்.
இதையடுத்து டுபாய் நோக்கி பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த சீனப்பெண்ணும் அவருடைய தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவ்விருவரையும் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.