
மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள வீட்டில் இடம்பெற்ற சம்பவம் - தீவிர விசாரணையில் பொலிஸார்
மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு சற்று தூரத்திலுள்ள மன்னார் பெரிய கடை பகுதியில் ஒரு அரச ஊழியருடைய வீட்டில் துணிகரமான முறையில் பணம், நகைகள் திருடப்பட்டுள்ளதாக மன்னார் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சனிக்கிழமை (25.07.2020) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது
சனிக்கிழமை (25.07.2020) அன்று பிற்பகல் 4.30. மணிக்கும் இரவு 9 மணிக்குமிடையே மன்னார் பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 125 மீற்றர் தூரத்திலுள்ள மன்னார் பெரியகடை பகுதியில் இருக்கும் வீடு ஒன்றில் கடற்தொழில் திணைக்களத்தில் கடமைபுரியும் உத்தியோகத்தர் வீட்டிலேயே வீட்டார்கள் இல்லாத சமயத்தில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் அன்று இரவு வீட்டார் தங்கள் வீட்டுக்குத் திரும்பியதும் இரவு 9 மணியளவில் இரவு சாப்பாடு வாங்குவதற்காக பணம் வைக்கப்பட்ட இடத்தை பார்த்தபோது பணத்தை காணவில்லையெனவும்
இதைத் தொடர்ந்து அலுமாரியை திறந்து பார்த்தபோது அங்கும் வைக்கப்பட்ட நகைகளையும் காணாது திகைத்துள்ளனர். அலுமாரி திறப்பு அதன் வாயிலேயே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருடர் வீட்டின் ஓடுகளை கழற்றி அதனூடாகவே அறைக்குள் இறங்கி அதனூடாகவே திரும்பிச் சென்றே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.
12 பவுண் கொண்ட தாலிக்கொடி, 3 பவுண் முறுக்கு காப்பு ஒன்று, முக்கால் பவுண் கொண்ட ஒரு சோடி கல் தோடு மற்றும் ஒரு சிறிய உடைந்த மோதிரமும் அத்துடன் 38 ஆயிரம் பணமுமே திருடப்பட்டுள்ளதாக மன்னார் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுவிடயமாக மன்னார் பொலிசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.