மேலும் ஒரு பரீட்சையின் வினாத்தாளும் கசிந்தது

மேலும் ஒரு பரீட்சையின் வினாத்தாளும் கசிந்தது

எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ள சப்ரகமுவ மாகாண பாடசாலை வருட இறுதிப் தவணை பரீட்சையின் வினாத்தாள் ஒன்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பகிரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல்மாகாண தவணை பரீட்சையின் விடைத்தாள் ஒன்றும் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியப் பரீட்சைகள் மற்றும் மாகாணக் கல்வித் திணைக்களங்களால் நடத்தப்படும் பல பாடசாலை தவணை பரீட்சைகளின் வினாத்தாள்கள் பரீட்சைக்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் சமூக ஊடகங்களில் கசிந்தமை அண்மைக்காலமாக பதிவாகி வருகின்றன.

2023ஆம் ஆண்டுக்கான வருட இறுதி மதிப்பீட்டுப் பரீட்சைக்காக மேல் மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரம் 10 மற்றும் 11ஆம் தரங்களின் விஞ்ஞானம் மற்றும் வரலாறு பாடங்களின் வினாத்தாள்கள் நேற்று முன்தினம் இரவு சமூக ஊடகங்களில் வெளியாகின.

இந்நிலையில், மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 11ஆம் தர மாணவர்களுக்காக செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள கணிதப் பாட வினாத்தாள் தொடர்பான விடைத்தாள் என கூறப்படும் ஆவணம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள 10ஆம் தர ஆங்கில மொழி பாட வினாத்தாளின் இரண்டாம் பாகம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.