ஸ்ரீலங்காவில் மருத்துவர்களின் மகத்தான சாதனை!
ஸ்ரீலங்காவில் முதன் முதலில் சிறுமி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சையை கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சேவையாற்றும் பல விசேட மருத்துவ நிபுணர்களின் நேரடியான பங்களிப்புடன் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை பிரிவினர், உயிருடன் இருக்கும் ஒருவரது ஈரலில் ஒரு பகுதியை பயன்படுத்தி சிரோசிஸ் நோயினால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்த 09 வயதான சிறுமிக்கு இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசேட சத்திர சிகிச்சை நிபுணர் பேராசிரியர் ரொஹான் சிறிவர்தன தலைமையிலான மருத்துவர்கள் இந்த சத்திர சிகிச்சையை கடந்த 14 ஆம் திகதி வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
இதுவே இலங்கையில் சிறுவயது பிள்ளை ஒருவருக்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஈரல் மாற்று சத்திர சிகிச்சையாகும்.
மிகவும் நுட்பமான இந்த சத்திர சிகிச்சை 12 மணி நேரத்திற்கும் மேல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்லீரல் பகுதியை கொடையாக வழங்கிய 38 வயதான சிறுமியின் தாய் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர் துரிதமாக குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.