போக்குவரத்து விதிகளை மீறிய 675 வாகனங்கள் அடையாளம்!
கொழும்பு நகரினுள் போக்குவரத்து விதிகளை மீறிய 675 வாகனங்கள் சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி காவல்துறைமா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்ட சாரதிகளை எச்சரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிபிபிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த சாரதிகளுக்கு அது தொடர்பில் அறிவுறுத்தல்கள் அடங்கிய அறிவித்தல் ஒன்றையும் அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் முதலாம் திகதி முதல் கொழும்பு நகரில் சிசிடிவி மூலம், போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொண்டதாக அடையாளம் காணப்படும் வாகன சாரதிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் பிரதி காவல்துறைமா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை கண்காணிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் புதிய சிசிடிவி கண்காணிப்பு முறை கடந்த 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
அந்த வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்புக்கு பிரவேசிக்கும் வாகனங்கள் 108 சிசிடிவி கெமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.
தூரபிரதேசங்களிலிருந்து கொழும்புக்கு வரும் சாரதியொருவர் போக்குவரத்து விதிகளை மீறினால், அவர் வசிக்கும் பகுதியில் உள்ள காவல்நிலையம் ஊடாக அபராதப் பத்திரத்தை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி காவல்துறைமா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.