
நுண்நிதி கடன் பொறிகளில் இருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும்!
கிராமிய வங்கியின் கருத்தாக்கமாக பங்களாதேஷில் உருவாக்கப்பட்ட நுண் கடன் வங்கிக் கட்டமைப்பானது பெண்களை மையமாகக் கொண்டு மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. ஜனசவிய வேலைத்திட்டத்திலும், முன்னாள் ஹம்பாந்தோட்டை மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த மித்ரரத்ன என்ற நபர் கிராமிய வங்கிகளைப் போன்று பெண்களை மையப்படுத்தி ஜனசக்தி வங்கிகளை மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார்.
இது முழுக்க முழுக்க பெண்கள் தலைமையிலான குடும்ப அலகுகளைக் கொண்ட திட்டம் என்பதோடு,வறுமையை ஒழிப்பதே நோக்கமாக இருந்தாலும்,பல்வேறு நபர்கள் அப்பாவி மக்களுக்குப் பணத்தைக் கொடுத்து விட்டு,மிகவும் நலிந்த பிரிவினரைக் குறிவைத்து அதை வியாபாரமாக உருவாக்கி தற்போது பெரும் கடன் பொறியை உருவாக்கியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சில வர்த்தகர்கள் இந்த எண்ணக்கருவை வணிகமாக மாற்றியுள்ளனர். கடன் கொடுத்து, அதிக வட்டி அறவிட்டு,கடனை செலுத்த முடியாமால் போகும் போது கடனை இன்னும் அதிக சுமையாக மாற்றி அறவிட்டு வருகின்றனர். சிறந்ததொரு எண்ணக்கரு அழிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், நல்லாட்சி ஆட்சிக்காலத்தில் மங்கள சமரவீர இது தொடர்பில் கவனத்தை செலுத்தி, குறிப்பிட்ட அளவு நுண் நிதிக் கடனில் இருந்து விடுபட,வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடுகளை மேற்கொண்டார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இது தற்போது கடுமையான பிரச்சினையாக மாறியுள்ளது. இதற்கு,தனிச் சட்டங்களைக் கொண்டு வந்து,நுண் நிதி கடன் வழங்கும் நிறுவனங்களை தெளிவான ஒழுங்குமுறைக்குள் கொண்டு வர வேண்டும். இந்த பெறுமானம் மிக்க எண்ணக்கருவை அதிக இலாபமீட்டும் ஒன்றாக மாற்றுவதை தவிர்க்கவும்.நுண் கடன்களில் சிக்கித் தவிக்கும் மக்களை அதிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் இன்று (12) இடம்பெற்ற நுண் நிதி கடன் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.