
மாணவிக்கு தடை விதித்த ஆசிரியர்: செம்மலை மகாவித்தியாலயத்தில் நடப்பது என்ன..!
முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை மகாவித்தியாலயம் உயர்தர பிரிவுகளுக்கான கற்றல் கற்பித்தலை கொண்டு இயங்கும் பாடசாலை ஆகும்.
முல்லைத்தீவு - கொக்கிளாய் வீதியில் செம்மலை மகாவித்தியாலயம் அமைந்துள்ளது. செம்மலை மகாவித்தியாலயத்தில் 2024 ஆம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றும் உயிரியல் பிரிவு அலகு மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் தவணைக்குரிய உயிரியல் பாடப்பரப்புக்களை போதிப்பதற்கு முதலாம் தவணைக் காலத்தில் பாடசாலையில் ஆசியர் இல்லை.
இரண்டாம் தவணைக்குரிய பாடப்பரப்பை கற்பிப்பதற்காக ஆசிரியர் வரவழைக்கப்பட்டுள்ளார். முல்லைதீவு மகாவித்தியாலயத்தில் கடமையாற்றும் உயிரியல் பாட ஆசிரியர் வாரத்தில் இரண்டு நாட்கள் (செவ்வாய் மற்றும் வியாழன்) செம்மலை மகாவித்தியாலயத்தில் கடமையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்.
இரண்டாம் தவணைப் பரீட்சைகள் எதிர்வரும் மாதத்தில் நடத்தப்பட்ட இருக்கும் போது மூன்றாம் தவணைக்குரிய பாடப்பரப்புக்களை வகுப்பில் கற்பிக்கின்றார்.
இரண்டாம் தவணைப் பரீட்சைக்கு தயாராகும் உயர்தர உயிரியல் பிரிவு மாணவியொருவர் கடந்த வாரம் வியாழன் பாடசாலைக்கு சமூகமளிக்காது வீட்டில் இருந்தவாறே சுயகற்றலில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (19.09.2023) குறித்த மாணவி மீண்டும் பாடசாலையில் உயிரியல் பிரிவு பாடத்திற்கான வகுப்பில் கலந்து கொண்டபோது வகுப்பில் இனி கலந்துகொள்ளக்கூடாது என ஆசிரியர் தடை விதித்ததுள்ளார்.
உயர்தர உயிரியல் பிரிவு கற்றல் கற்பித்தல் அலகு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டதென தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பிக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு இயங்கிய போதும் கடந்த 2022, 2023 பிரிவில் பரீட்சைக்கு எந்த மாணவர்களும் தோற்றவில்லை என கூறப்படுகிறது.
இந்த மாணவியின் கோரலையடுத்தே மீளவும் 2024 ஆம் ஆண்டுக்கான பரீட்சைக்கு தோற்றுவதற்கு மூன்று மாணவிகளை மட்டும் கொண்டு மீளவும் குறித்த பாடத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
ஒரு மாணவி பாடம் மாறிச்சென்றுள்ள நிலையில் இரண்டு மாணவிகளை மட்டும் கொண்டு செயற்படும் செம்மலை மகாவித்தியாலயத்தில் பொருத்தமற்ற முறையில் வகுப்பு தடை வித்திக்கப்படுதல் மாணவியின் மனதை பாதித்துள்ளதாக மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை செயற்பாடுகள் பற்றிய மாணவரிடையே மேற்கொண்ட தேடலில் நிறைய தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
இரண்டு மாணவிகளை மட்டும் உயர்தரத்தில் கொண்டுள்ளதால் மாணவியரிடையே போட்டி போட்டு படிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் இதனால் பாடசாலை மாறிச் செல்வதற்கு இதே பாடசாலையில் படித்து உயர்தர உயிரியல் பிரிவில் கல்வியைத் தொடரும் மாணவி முயற்சிப்பதாகவும் அந்த மாணவிக்கு உதவிடும் நோக்கில் உயர்தர உயிரியல் பிரிவு பாட ஆசிரியர்கள் செயற்படுவதாகவும் சில குற்றச்சட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், வகுப்பு தடை விதித்த மாணவி பாடசாலை மாறிச் சென்றால் மற்றைய மாணவிக்கு விலகிச் செல்ல பாடசாலை அதிபர் அனுமதியளிப்பார் என்ற கருத்தும் இருப்பதாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த உயர்தரப் பரீட்சையில் வைத்தியத்துறைக்கு தெரிவான செல்வி செ.தட்சாயினி குமுழமுனை மகாவித்தியாலயத்தில் தனியொரு மாணவியாக தன் கற்றலை மேற்கொண்டார் என்பதும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
முல்லைத்தீவு மகாவித்தியால உயிரியல் பாட ஆசிரியர் செம்மலை மகாவித்தியாலயத்தில் இருண்டு நாட்கள் கடமையாற்ற பணிக்கப்பட்டுள்ளார்.
குமுழமுனை மகாவித்தியால உயிரியல் பிரிவு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புக்களை எடுக்கின்றார். இதற்கான நிதியினை அந்த பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் வழங்கி வருகின்றது.
எனினும் குமுழமுனை மகாவித்தியாலயத்தில் வைத்தியத்துறைக்கு தெரிவான மாணவி இந்த ஆசிரியரிடம் எந்த கற்றலிலும் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. (செ.தட்சாயினியுடனான உரையாடலிலிருந்து கிமைக்கப்பெற்ற தகவல்)
இவ்வாறு ஆசிரியர்கள் பொறுப்பற்று செயற்படுவதை பாடசாலை அதிபர்கள் எப்படி அனுமதிக்கின்றார் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
வகுப்புத் தடை விதிக்க வேண்டுமானால் அதற்கான அதிகாரம் யாரிடம் காணப்படுகிறது? இரண்டாம் தவணைப் பரீட்சைக்கு எதற்கு மூன்றாம் தவணைப் பாடப்பரப்புக்களை படிக்க வேண்டும்.
முதலாம் தவணைக்குரிய பாடப்பரப்புக்களில் தெளிவு பெறாது மூன்றாம் தவணைப் பாடப்பரப்புக்களில் கவனம் செலுத்துவது பொருத்தமற்றது.
இவ்வாறிருக்க முதலாம் தவணைக்குரிய பாடங்களை மீட்டல் செய்வதற்காக முயன்ற மாணவிக்கு பாட ஆசிரியர் எப்படி தடை விதிக்க முடியும்.
இத்தகைய செயலால் அந்த மாணவி பாடசாலை விலகிச் சென்றால் இந்த உயிரியல் பிரிவும் செம்மலை மகாவித்தியாலயத்தில் இல்லாது போகும் என்பது அச்சப்பட வேண்டிய விடயமாகும்.
இந்த பாட ஆசிரியரே செயம்மலை மகாவித்தியாலயத்தின் முதலில் உயிரியல் பிரிவு பாட ஆசிரியராக இருந்தார் என்பதும் குறிப்பிட்டாக வேண்டும்.என பாடசாலையின் நலன் விரும்பியொருவருடன் பேசியபோது கருத்து பகிர்ந்தார்.
மேலதிக வகுப்புக்களுக்கு மாணவர்களை தூண்டுவது வன்னிப் பகுதி எங்கும் பரவலாக அவதானிக்கப்படும் விடயமாக காணப்படுகிறது. பாடசாலையில் சரிவர கற்பிக்காது விட்டு விட்டு மேலதிக வகுப்புக்களில் கற்பதற்காக மாணவர்கள் தூண்டப்படுகின்றனர்.
உயிரியல் பிரிவு மற்றும் கணிதப் பிரிவுகளில் கற்கும் மாணவர்கள் சுயகற்றலுக்கான நேரமின்றி அந்த முயற்சியின்றி மேலதிக வகுப்புக்களிலேயே தங்களின் நீண்ட நேரத்தை செலவிடுகின்றனர்.
மேலதிக வகுப்புக்கள் இல்லையென்றால் அந்தப் பாடங்களில் தேர்ச்சி பெறமுடியாது என்ற எண்ணம் வளர்க்கப்பட்டிருப்பது கவலைக்குரியது.
பாடசாலையின் கற்றல் கற்பித்தல் சரிவர நடைபெற்றால் எதற்கு மேலதிக வகுப்பு தேவையாகின்றது. மேலதிக வகுப்புக்கான நேரத்தை சுயகற்றல் மற்றும் ஆய்வுக்கற்றல்களில் மாணவர்கள் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும்.
பாடசாலைச் சமூகம் இது பற்றி சிந்திக்க வேண்டும். இளம் தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டிகளாக இருக்க வேண்டியவர்கள் ஆசிரியர்களே தவறுகளை விடும் மாணவர்களை அந்த தவறுகளிலிருந்து மீட்டெடுத்து நேரிய பாதையில் பயணிக்கச் செய்து நாளைய தேசத்தின் சவால்களை எதிர்கொண்டு வாழ கற்றுக்கொடுக்க வேண்டும்.
மாணவர்களின் தவறுகளுக்கு வழங்கக்கைடிய மிகப்பெரிய தண்டனையே அவர்களை அந்த தவறிலிருந்து மீண்டு வரச்செய்ய வேண்டும்.
பொருத்தப்பாடற்ற முடிவுகளை ஆசியர்கள் எடுப்பதானது அவர்கள் மீது மாணவருக்குள்ள மரியாதையை குறைத்து விடும்.
திருப்பிக் கேள்வி கேட்டு வளரும் போக்கினை மாணவரிடையே வளர்க்க வேண்டும். துரோணர் போல ஆசிரியர்கள் இனியும் இருந்து ஈழத்து மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவப்போவதில்லை.
சிறந்த மாணவனை பாராட்ட வேண்டிய நேரத்தில் குருதட்சணையாக சிறந்த மாணவனின் விரலை கேட்கும் துரோணர் எப்படி நல்லாசிரியராக இருப்பார்.