திருகோணமலையில் வாகன விபத்து: 9 வயது சிறுமி பலி.

திருகோணமலையில் வாகன விபத்து: 9 வயது சிறுமி பலி.

திருகோணமலை - உட்துறைமுக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் 9 வயதுடைய சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்றிரவு (25.08.2023) இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் கல்வி பயின்று வரும் எட்ரிக் செர்லின் என்ற 09 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் தாய், மகள் மற்றும் அவரது தம்பியின் மகள் ஆகியோர் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் எதிரே வந்த சொகுசு வான் ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

திருகோணமலையில் வாகன விபத்து: 9 வயது சிறுமி பலி | Accident In Trinco 9 Years Old Girl Dead

இதேவேளை சீனக்குடா பகுதியில் இருந்து வந்த சொகுசு வானில் பெண் ஒருவரை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்க கொண்டு செல்லும் வேளையிலே மோட்டார் சைக்கிளுடன் வான் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தின் போது வானில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் சென்ற மூவரில் ஒன்பது வயது சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய ஐந்து வயது சிறுமியை மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதியை திருகோணமலை-துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.