4.1 மில்லியன் ரூபா நிலுவை தொகை - மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் மின் இணைப்பு துண்டிப்பு..!
இலங்கை மின்சார சபை கூறுவது போல 4.1 மில்லியன் ரூபா நிலுவைத் தொகையைச் செலுத்தும் நிலையில் நாங்கள் இல்லை” என்று மிஹிந்தலை ரஜ்மாஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குனாவெவே தம்மரதன தேரர் கூறியுள்ளார்.
மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் மின்சாரக் கட்டணத்தின் நிலுவைத் தொகை செலுத்தப்படாததன் காரணமாக நேற்று (02) காலை மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது விகாராதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
“மிஹிந்தலை புனித நகரத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் இப்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த வேளையில் மின் துண்டிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் உள்ள சந்நதியின் அறைகள், காவல் நிலையம், தொல்லியல் துறைகள் ஆகியவற்றை இருளில் மூழ்க வைக்கும்.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் தொல்லியல் துறைக்கு அரசு உடனடியாக பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அது மாத்திரமல்லாமல் கோயிலில் வசிக்கும் துறவிகள் தண்ணீர் இல்லாமல் தவிப்பார்கள் என்றும் மிஹிந்தலை ரஜமஹா விகாரைக்குப் பொறுப்பான தேரர் கூறினார்.
அது மாத்திரமல்லாமல் பிக்குகள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு கட்டணம் செலுத்தக்கூடிய தனியான மின் மீட்டர்களை பொருத்துமாறும் இலங்கை மின்சார சபையிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
கடந்த ஆண்டு முதலே 4.1 மில்லியன் ரூபா நிதி நிலுவையில் உள்ள விடயம் மிஹிந்தலை நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது, இந்த நிலுவையை செலுத்தி முடிக்கும் படி பிரதம அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்ததாக என்று இலங்கை மின்சார சபையின் அனுராதபுர பிராந்திய பொறியியலாளர் ஜே.எம்.எப். ஜயவர்தன கூறினார்.
செலுத்தப்படாத நிலையில் முன்னறிவிப்புடன் நேற்று இரவு 11.00 மணியளவில் மின் இணைப்பை துண்டிக்க வேண்டியிருந்தது என்றும் அவர் மேலும் கூறினார்.