பிறக்கும் போதே ஒரு சிறுநீரகத்துடன் தான் குழந்தை பிறந்ததா - மருத்துவ அறிக்கையில் புதிய சர்ச்சை!!
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அண்மையில் சத்திரசிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்த குழந்தை தொடர்பான வழக்கில், குழந்தை பிறக்கும் போதே ஒரே ஒரு சிறுநீரகத்துடன் தான் பிறந்திருப்பதாக நீதிமன்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய பொரளை காவல்துறையினருக்கு நேற்று (02) உத்தரவிட்டுள்ளார்.
சிறுநீரக சத்திரசிகிச்சைக்குப் பின்னர் அண்மையில் உயிரிழந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவ பதிவுகளின் படி அவருக்கு இரண்டு சிறுநீரகங்கள் இருந்ததாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இப்போது, பிறக்கும் போது குழந்தைக்கு ஒரே ஒரு சிறுநீரகமே இருந்ததாக நீதிமன்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது இது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
பொரளை காவல்துறையினர் சட்ட வைத்திய அதிகாரி ருஹுல் ஹக்கை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர் வழங்கிய வைத்திய அறிக்கையில் குழந்தைக்கு பிறப்பிலிருந்து ஒரே ஒரு சிறுநீரகமே இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் குழந்தையின் சிகிச்சையின் போது, மருத்துவ சிகிச்சை அறிக்கைகள் குழந்தைக்கு இரண்டு சிறுநீரகங்கள் இருப்பதாகக் கூறுகின்றன, சட்ட வைத்திய அதிகாரியின் கூற்றுப்படி, இது எப்படி நடந்தது என்பதை விசாரிக்குமாறு பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.
இதனால் மருத்துவப் பதிவேடுகளில் சிக்கல் இருப்பதாகவும், எனவே அறிக்கையை நம்பாமல் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, குழந்தைக்கு சிகிச்சை அளித்த சகல மருத்துவ அறிக்கைகளையும் உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது