
24 மணித்தியாலங்களில் வீதி விபத்துக்களால் 16 பேர் உயிரிழப்பு - 98 பேர் படு காயம்..!
கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 98 பேர் படு காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
மேலும், கவனக்குறைவாக வாகனம் செலுத்துதல், வீதி விதிமுறைகளை கடைப்பிடிக்காமை மேலும் பல பொறுப்பின்றிய செயற்பாடுகளே அதிகரித்து வரும் வீதி விபத்துகளுக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
அது மாத்திரமல்லாமல், இத்தகைய பொறுப்பின்றிய செயற்பாடுகளில் சாரதிகள் ஈடுபடுவது பயணிகள் மற்றும் பாதசாரிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றது, இவர்கள் எக்காரணம் கொண்டும் மன்னிக்கப்படக் கூடாது எனவும் அவர் கூறினார்.
அண்மைக் காலங்களில் நிகழ்ந்தேறிய விபத்துக்கள் தடுக்கப்படக் கூடியவையாக இருந்த போதிலும் சாரதிகளின் கவனக்குறைவால் குறித்த விபத்துக்கள் பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், பாதுகாப்பான சாரதிகளைகளை தல்தூவ பாராட்டியுள்ளார். மேலும், "இவர்கள் பாதுகாப்பான சாரதிகளாக மாத்திரம் செயற்படாமல் விபத்துகளைத் தடுக்கும் கலாசாரத்தை வளர்ப்பவர்களாகவும் செயற்படுகிறார்கள்" என அவர் கருத்து தெரிவித்தார்.
மேலும், வீதி விபத்துக்களை குறைப்பதற்காக வாகன சாரதிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பாக வாகனத்தை செலுத்த வேண்டும் என்றும் நிஹால் தல்தூவ கேட்டுக்கொண்டுள்ளார்.