மூன்று பிள்ளைகளின் தாய் கடத்தல் - மீன் வியாபாரி கைது...
29 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயை பலவந்தமாக கடத்திச் சென்று அடைத்து வைத்ததாக கூறப்படும் மீன் வியாபாரி ஒருவர் கம்புருபிட்டிய, மஸ்தகமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டதாக மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.
மீன் வியாபாரியின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி சுமார் 6 மாதங்களாக குறித்த வீட்டில் தங்கியிருந்த மூன்று பிள்ளைகளின் தாயாரையும் காவல்துறையினர் கைது செய்து வாக்குமூலத்தைப் பதிவுசெய்து வைத்திய பரிசோதனைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலும், தான் ஓடிப்போனால் கணவன் மற்றும் குழந்தைகளை கொன்று விடுவதாகவும், நிர்வாண காணொளிகளை எடுத்து இணையத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியதாகவும் அந்த பெண் காவல்துறையிடம் கூறியுள்ளார்.
தலைமுடியை வெட்டி கத்தியை காட்டி பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளானதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தாயான இவர் பல சந்தர்ப்பங்களில் பல காவல் நிலையங்களில் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக தென் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சஜீவ மெதவத்தவிடம் தெரிவித்ததை அடுத்து , அது தொடர்பான விசாரணைகளை மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் பொறுப்பதிகாரி திருமதி வருணி கெஷலா போகஹவத்தவிடம் கையளித்துள்ளார்.
அதன் பிரகாரம், அவரும் அவரது குழுவினரும் மாத்தறை நீதவான் நீதிமன்றில் தேடுதல் உத்தரவைப் பெற்று, சந்தேகநபரின் வீட்டைச் சோதனையிட்ட போது, குறித்த பெண்ணை அச்சுறுத்தப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 05 மீன் வெட்டும் கத்திகள் மற்றும் குத்துவிளக்கு என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமன்றி, அவரது நிர்வாண காட்சிகள் பதிவாகியிருந்த செல்போன் மற்றும் மெமரி கார்டுகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர் பதின்ம வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் காணொளிகளும் மொபைல் போனில் இருந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். 36 வயதுடைய சந்தேக நபர் மூன்று பிள்ளைகளின் தாயாரின் உறவினர் என காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.