கடலில் வீசப்பட்ட சட்டவிரோத தங்கக்கட்டிகள்: சுங்கத்துறையினர் அதிரடி..!

கடலில் வீசப்பட்ட சட்டவிரோத தங்கக்கட்டிகள்: சுங்கத்துறையினர் அதிரடி..!

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி செல்லப்பட்ட தங்கக்கட்டிகள் கடலில் வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம்(07.06.2023) இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக இந்திய சுங்கத்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் படகில் ரோந்துக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இதன்போது மண்டபம் வேதாளை அருகே நடுக்கடலில் உள்ள நல்ல தண்ணீர் தீவு கடல் பகுதியில் சந்தேகப்படும்படியாக பயணித்த பைபர் படகை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர்.

ஆனால் சுங்கத்துறையினரை கண்டதும் படகில் இருந்த கடத்தல்காரர்கள் படகை நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.

இதன்போது உச்சிப்புளி அருகே நொச்சியூரணி கடற்கரையில் உள்ள பாறையில் ஏற்றி படகை நிறுத்திவிட்டு, அதில் இருந்த கடத்தல்காரர்கள் 2 பேரும் கடற்கரையில் தயார் நிலையில் இருந்த ஒருவருடன் உந்துருளியில் ஏறி தங்கக்கட்டிகளுடன் தப்பி சென்றுள்ளனர்.

எனினும் அவர்கள் தங்களிடம் இருந்த பயணப்பையை வீசிச்சென்றுள்ளனர்.

இந்தநிலையில் கைவிடப்பட்ட படகில் சுங்கத்துறையினர் சோதனை செய்து அதில் இருந்த சுமார் 5 கிலோ கடத்தல் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடலில் வீசப்பட்ட சட்டவிரோத தங்கக்கட்டிகள்: சுங்கத்துறையினர் அதிரடி | Gold Thrown In Sea Srilankan Navy Investigation

 

படகின் என்ஜின்களையும் பறிமுதல் செய்துள்ள நிலையில் மேலும் தப்பிய 3 பேரையும் சுங்கத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அதேநேரம் தப்பிச் சென்றவர்கள் வீசிய பையில்; இருந்து தங்கக் கட்டிகள் கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறையினர் கடலில் சங்கு குளிப்பவர்களின் உதவியுடன் தீவிர தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று 3-வது நாளாக தங்கக் கட்டிகளை தேடும் பணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள், கடலோர பொலிஸாரின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.