பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு சாத்தியமில்லை : மஹிந்த அமரவீர!

பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு சாத்தியமில்லை : மஹிந்த அமரவீர!

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதாக இருந்த போதிலும் இந்த சந்தர்ப்பத்தில் பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு அல்லது எரிபொருள் நிவாரணத்தை வழங்குவதற்கு சந்தர்ப்பம் இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக நாட்டின் அனைத்து துறைகளின் வருமானம் குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன்,  கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான் பொது மக்கள் பேருந்துகளில் பயணிப்பதில்லை எனவும் போக்குவரத்து அமைச்சு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தனியார் பேருந்துகளின் நாளாந்த வருமானம் முன்பு இருந்த நிலையிலும் பார்க்க 50 சதவீதம் குறைவடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன்,  தனியார் பேருந்து  சங்கத்தினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,  3 இலட்சம் ரூபா கடன் அரசாங்க வங்கியின் மூலம் வழங்குதல், காலங்கடந்த குத்தகை தவணைக் கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் காப்புறுதி தவணைக்கான நிவாரண காலத்தை வழங்குதல் போன்ற பல கோரிக்கைகள்  தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.