தென்கடல் பகுதியில் தாழமுக்கம் - வானிலையில் திடீர் மாற்றம்! ஸ்ரீலங்காவில் தொடரும் அபாயம்

தென்கடல் பகுதியில் தாழமுக்கம் - வானிலையில் திடீர் மாற்றம்! ஸ்ரீலங்காவில் தொடரும் அபாயம்

நாட்டின் தென்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் தற்போது நிலவும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்குமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட பிரதேசத்தில் 219 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அத்துடன் காலியில் சில பிரதேசங்களில் 160 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் 117 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் இரத்தினபுரி பறக்கடுவ பிரதேசத்தில் 106 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் கம்பஹா பகுதியில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது

05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்ைக தெரிவித்துள்ளது.

அதே வேளை கடும் மழை காரணமாக வானிலை அவதான நிலையம் சிவப்பு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குத் தொடருமெனவும் அறிவித்துள்ளது.

அத்துடன் நிலவும் சிரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தில் மழைநீர் பெருக்கெடுப்பையடுத்து நியாகம பாலத்திற்கு அடியில் பாதுகாப்புக் கருதி ஒதுங்கிய மூவர் நீரில் சிக்கியுள்ளனர்.

உயிருக்காக போராடிய இவர்களை காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இராணுவ வீரர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர் . இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதி பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல் இந்துக்க விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.