மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை: மக்களின் போராட்டத்தில் வன்முறை
மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவி ஒருவர், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகின்ற சம்பவத்தை கண்டித்து உள்ளூர் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் வன்முறை களமாக மாறியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அண்மையில் 10 ஆம் வகுப்பு தேர்வில் சித்தியடைந்த குறித்த மாணவி, மரத்தடி ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதன்போது அந்த இடத்தில் இருந்து சில கையடக்க தொலைபேசிகள் மற்றும் சைக்கிள்களும் கைப்பற்றப்பற்றுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் வெளியானதும் கொல்கத்தாவில் இருந்து சிலிகுரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சோப்ரா என்ற இடத்தில் திரண்ட மக்கள், சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் குறித்த போராட்டத்தில் 3 பேருந்துகளும் பொலிஸ் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்நிலையில் 3 மணிநேரத்திற்கு பின்னர் போராட்டத்தை பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் மற்றுமொரு சாலையில் திரண்ட மக்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர்.
இதனால் குறித்த பகுதி போர்களமாக மாறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே உடல் கூறாய்வு அறிக்கையில், விஷம் உடலுக்குள் சென்றதால் குறித்த மாணவி உயிரிழந்துள்ளார் எனவும் அவரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.