புதுக்குடியிருப்பில் தொடரும் கிராம அலுவலர் மீதான தாக்குதல்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மல்லிகைத்தீவு கிராம அலுவலர் மீது பொதுமகன் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார் இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மந்துவில் கிராம அலுவலகராக பணியாற்றும் பு.கஜகோகுலன் எனும் கிராம அலுவலர் மக்களின் காணிப்பிரச்சனை ஒன்று தொடர்பில் நேரில் சென்று ஆராய்வதற்காக சென்று காணியினை பார்வையிட்டுவிட்டு திரும்பியபோது பிரச்சனைக்குரிய காணி உரிமையாளர் கிராம அலுவலகரை மறித்து கெட்டவார்த்தைகளால் பேசி தாக்குதல் நடத்தியுள்ளார் .
இச்சம்பவம் தொடர்பில் கிராம சேவகர் ஊடாக உடனடியாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய்பட்டதுடன் ,பிரதேச செயலாளர்,மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோருக்கும் முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மக்கள் பிரச்சனையை தீர்ப்பதற்காக பாடுபடும் கிராம சேவையாளர்கள் மறைமுகமாக அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிவருவதாக கிராம சேவையாளர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
மண்கொள்ளையர்கள்,மரக்கொள்ளையர்கள்,சட்டவிரோத கசிப்பு உற்பத்தியாளர்கள்,வியாபாரிகள் என பல மாபியா கும்பல்கள் அரசியல் பின்னணிகளோடு செயற்பட்டு வருகின்றார்கள் எனவும் இவ்வாறான சமூக சீர்கேடுகளை தட்டிக்கேட்க முற்படும் கிராம அலுவலகர்கள் மறைமுகமாக அச்சுறுத்தப்படுவதாகவும் கிராம சேவையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை குறித்த விடயங்களில் தமக்கான நீதி கிடைப்பதில்லை எனவும் அண்மையில் சிவநகர் கிராம அலுவலர் குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடைய பொதுமகன் ஒருவரால் அச்சுறுத்தப்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்காது கிராம அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டு பிரச்சனை நீர்த்துப்போக செய்யப்பட்டது.
இதேவேளை விசுவமடு மேற்கு கிராம அலுவலர் பொதுமகன் ஒருவரால் அச்சுறுத்தப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் கடந்த மாசி மாதம் முறைப்பாடு செய்து பொலிசார் இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இவ்வாறான சூழல்கள் தொடருமாயின் கிராம அலுவலர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத கிராம அலுவலர் ஒருவர் தெரிவித்தார்
இதேவேளை குறித்த கிராம அலுவலர் மீது இன்று தாக்குதல் மேற்கொண்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.