வகுப்பறையில் ஆறு மாத கருவுடன் ரத்த கோலத்தில் சடலமாக கிடந்த கல்லூரி மாணவி... போலீஸ் விசாரணை

வகுப்பறையில் ஆறு மாத கருவுடன் ரத்த கோலத்தில் சடலமாக கிடந்த கல்லூரி மாணவி... போலீஸ் விசாரணை

ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூரில் தனியார் பொறியியல் கல்லூரி படிக்கும் மாணவி வகுப்பறையில் ரத்தக்கோலத்தில் அருகில் ஆறு மாத கருவுடன் இறந்துக்கிடந்துள்ளார். இந்தச் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், நெல்லூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 19 வயதுடைய மாணவி பி.டெக் இரண்டாம் ஆண்டில்  படித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 11 ஆம் தேதி அந்த மாணவி கல்லூரி வகுப்பறையில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

யாரும் இல்லாதபோது வகுப்பறையின் கதவுகளை அடைத்துக்கொண்டு அவர் உள்ளே இருந்தார். நீண்ட நேரம் ஆகியும் மாணவி கதவைத் திறக்காததால், சக மாணவிகள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்ததில் மாணவி ரத்தப்போக்குடன் சடலமாகக் கிடந்துள்ளார். மேலும் அவரின் அருகில் ஆறு மாதமான கரு கிடந்துள்ளது.

இதனையடுத்து, கல்லூரி நிர்வாகம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மாணவி கருக்கலைப்பினால் மரணமடைந்தாரா அல்லது யூடியூப் போன்ற சமூக வலைத்தளம் பார்த்துக் கருக்கலைக்க முயற்சி செய்து மரணமடைந்தாரா என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாணவியின் போனை கைப்பற்றி காவல்துறை நடத்திய முதற்கட்ட சோதனையில், மாணவிக்கும் அனந்த சாகரம் பகுதியைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர் ஒருவருக்கும் இடையே நெருங்கிய பழக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது. எனவே அவரிடம் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளனர்.