அஸாமில் தொடரும் மழை – இதுவரையில் 110 பேர் உயிரிழப்பு
அஸாமில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேநேரம் இந்த அனர்த்தம் காரணமாக 25 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அஸாமில் அண்மையில் பெய்த மழையால் 24 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது.
இதன் காரணமாக ஒரு இலட்சத்து 12 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. திப்ருகார், சிராங், பார்பேட்டா, கோல்பாரா மற்றும் நாகான் ஆகிய மாவட்டங்களில் குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்கள் மூழ்கியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி மேலும் 5 பேர் உயிரிழந்ததால், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 84 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, முதலமைச்சர் சர்பனந்தா சோனோவாலை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார். வெள்ள நிலைமையைச் சமாளிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் கூறியதாக சோனோவால் ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.