2020க்குப் பிறகு முதல் முறையாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எல்லைகளை திறக்கிறது சீனா

2020க்குப் பிறகு முதல் முறையாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எல்லைகளை திறக்கிறது சீனா

நாளை முதல் அனைத்து வகையான விசாக்களையும் வழங்குவதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக தமது எல்லைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

கொவிட் -19 தொற்றுநோய் பரவலையடுத்து, சுமார் மூன்று வருடங்களின் பின்னர் முதல் முறையாக, சீனா தமது எல்லைகளை சுற்றுலா பயணிகளுக்கு திறக்கவுள்ளது.

கடந்த மாதம் கொவிட்-19 இன் அண்மைய மீள் எழுச்சியை முறியடித்ததாக அதிகாரிகள் அறிவித்ததை தொடர்ந்து, கொவிட்-19 தொடர்பாக விதிக்கப்பட்ட எல்லைக் கட்டுப்பாடு நீக்கப்படுவதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், கடந்த 2020 மார்ச் 28 ஆம் திகதிக்கு முன் வழங்கப்பட்ட விசாவை வைத்திருக்கும் வெளிநாட்டினரும், இது செல்லுபடியாகும் திகதிக்குள் சீனாவிற்குள் நுழைய முடியும் என்றும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை,கடந்த ஜனவரி மாதம் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான தமது குடிமக்களுக்கான ஆலோசனையை மீளப் பெற்ற சீனா, சுற்றுலாப் பயணங்கள் அனுமதிக்கப்படும் பட்டியலில் மேலும் 40 நாடுகளைச் சேர்த்து, மொத்த நாடுகளின் எண்ணிக்கையை 60 ஆகக் திருத்தியமைத்தது.

இந்தநிலையில், கொவிட்-19 தொற்று பரவலுக்கு பின்னரான முதலாவது சீனா சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று, இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.