மின்சார சபையின் மறுசீரமைப்பை அடுத்த வாரத்திற்குள் செயற்படுத்த திட்டம்

மின்சார சபையின் மறுசீரமைப்பை அடுத்த வாரத்திற்குள் செயற்படுத்த திட்டம்

இறுதி சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படுவதற்கு முன்னதாக மின்சார சபையில் மேற்கொள்ளக்கூடிய மறுசீரமைப்பை அடுத்த வாரத்திற்குள் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கூட்டு ஒப்பந்தங்களில் இருந்து விலகுவதும் நிதி நிர்வாகம் தொடர்பாக தேவையான புதிய கொள்கை முடிவுகளை எடுப்பதும் அதன் முதற்கட்ட நடவடிக்கை என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செய்யும் வேலைத்திட்டம் தொடர்பான மீளாய்வு கூட்டத்தில், இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் குறித்த மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு வழங்கக்கூடிய ஆதரவு குறித்து தங்களுக்கு தெரிவித்துள்ளதாகவும் அதற்கான ஆதரவை பெற்றுள்ளதாகவும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், நிதி கணக்காய்வு, மனிதவள ஆய்வு, சொத்து கணக்காய்வு மற்றும் சட்டம் ஆகியவற்றுக்கு அந்த ஆதரவு பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தங்கள் முன்னதாகவே ஏற்படுத்தி கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், மறுசீரமைப்பு பாதை வரைபடம் மற்றும் காலக்கெடு குறித்து அடுத்த வாரம் அமைச்சரவைக்கு விளக்கமளிக்கப்பட உள்ளது.

3 வருடங்களுக்கு ஒருமுறை 25 சதவீதம் சம்பளத்தை அதிகரிக்கும் கனியவள நிறுவனங்கள் மற்றும் மின்சார சபைகளின் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து அரசாங்கம் விலகுவதாகவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜசேகர நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.