பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - ஜனாதிபதி
உலகில் முன்னேறிய நாடுகளைப் போன்று பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை (8) வோட்டர்ஸ் எட்ஜ் விடுதியில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பெண்கள் முன்னிலையில் இருப்பதாகவும், அந்த நிலைமையை மேலும் விரிவுப்படுத்தி, உலகில் முன்னேறிய நாடுகளைப் போன்று பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 'பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கை' மற்றும் 'பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயற்திட்டம்' ஆகியவை அதற்கு உறுதுணையாக இருக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சார்க் அமைப்பில் பெண்களின் உரிமைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படாததால், அந்த உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக சார்க் நாடுகளின் பிரதான பெண் செயற்பாட்டாளர்களின் கூட்டம் இந்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, ஆசிய பிராந்தியத்தில் பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் இலங்கை முன்னிலையில் இருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.