மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணம் வெளியானது!
இன்று முதல் அமுலாகும் வகையில் 66 சதவீதமாக மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பெரும்பான்மையான அங்கத்தவர்களின் அனுமதியின் கீழ் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சக்தி அமைச்சில் இன்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துவெளியிட்ட போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
தொடர் மின் உற்பத்திக்கான செலவை ஈடு செய்யும் வகையிலே இந்த மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இன்று முதல் நாடளாவிய ரீதியாக தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நிலக்கரி கொள்வனவு செய்வதற்காக இலங்கை வங்கி 22 பில்லியன் ரூபாவை வழங்கவும், மக்கள் வங்கி 50 பில்லியன் ரூபாவை வழங்கவும் விருப்பம் வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய எதிர்காலத்தில் குறைந்த வருமானம் மற்றும் குறைந்தளவில் மின்சார பாவனை உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், மத வழிபாட்டு தலங்கள் மற்றும் அரச கல்வி நிலையங்களுக்கு சூரியக்கதிர் கட்டமைப்புக்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.