
உயிர் பலி 17,000 ஐ கடந்தது: நீர், வெப்பம் இன்மையால் உயிரிழப்பு உயர்கிறது
தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,000 ஐ கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துருக்கியில் 14,351 பேரும், சிரியாவில் 3,162 பேரும் இறந்துள்ளனர். அதன்படி உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 17,513 ஆக அதிகரித்துள்ளது.
இடிபாடுகளின் கீழ் சிக்கி உயிருடன் இருந்த பலர், தண்ணீர் அல்லது கடும் குளிரில் வெப்பம் இன்றி உயிரிழப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிப்பதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், உயிர் பிழைத்த பலர், தங்குமிடம், தண்ணீர், எரிபொருள் அல்லது மின்சாரம் இல்லாமல் தங்கள் உயிரை இழக்க நேரிடும் என்று உலக சுகாதார நிறுவனம் அஞ்சுகிறது.
ஐ.நா. உதவி குழுவினரை ஏற்றிய ஆறு பாரவுர்திகள் துருக்கியில் இருந்து சிரியாவிற்குள் எல்லையைத் தாண்டியுள்ளது. இது சிரிய மக்களுக்கு கிடைத்த முதல் சர்வதேச உதவியாக கருதப்படுகிறது.
இரு நாடுகளிலும் மீட்புப் பணியாளர்கள் தங்கள் கடினமான பணியைத் தொடர்கின்றனர்.
எனினும், இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் பலர் உயிருடன் இருப்பர் என்ற நம்பிக்கை வலுவிழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.