8 போலீசாருக்கு கொரோனா- போலீஸ் நிலையம் மூடல்

8 போலீசாருக்கு கொரோனா- போலீஸ் நிலையம் மூடல்

நெல்லை மாநகர பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகர் பகுதியில் தொற்று அதிகமாக இருந்ததால், அந்த தெரு மூடப்பட்டது. சுகாதார பணியை தீவிரப்படுத்தினாலும், கொரோனா வைரஸ் தொற்று குறையவில்லை.

கொரோனா தொற்று போலீசாரையும் விட்டு வைக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 3 போலீஸ்காரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் சேர்ந்தனர்.

இதைத்தொடர்ந்து நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 8 போலீஸ்காரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ்காரர்கள் குடியிருக்கும் பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, நேற்று காலையில் நெல்லை டவுன் போலீஸ் நிலையம் மூடப்பட்டது. அங்கு மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து, சுகாதார பணிகளில் ஈடுபட்டனர்.